உய்குர் முஸ்லீம்கள் 6 பேருக்கு மரண தண்டனை
سْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
"உய்குர் முஸ்லீம்கள் 6 பேருக்கு மரண தண்டனை கொடுப்பது உய்குரின் பிரச்சனைக்கு முடிவு காணும் வழி அல்ல, மாறாக இது மக்களிடையே கோபத்தை தூண்டி பிரச்னையை இன்னும் அதிகமாக்கும்" என்று நாடுகடத்தப்பட்ட உய்குர் மக்கள் பிரிவின் தலைவர் ரெபியா கதீர் தெரிவித்தார்.பல வருடங்களாக சீனாவின் சிறைகளில் இருந்த இவர் தனது நியுசிலாந்து பயணத்தின் போது, "மரண தண்டனை விதிக்கப்பட்ட அந்த ஆறு பேர்களின் விசாரணை சீன சட்டதின்படியோ அல்லது சர்வதேச சட்டத்தின் படியோ நீதமாக நடத்தப்படவில்லை" என்று தெரிவித்தார்.
"இது அந்த பகுதியில் அமைதியையும் நிலையான தன்மையையும் உருவாக்கப்போவதில்லை, மாறாக உய்குர் மக்களை இது கோபமுறச்செய்யும்" என்று அவர் கூறினார். இந்த செய்தியை அவர் 6 பேரின் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட தினத்தின் மறுநாள் கூறினார்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்த ஆறு பேரும் கடந்த ஜூலை மாதம் உய்குரின் ஜிங்க்ஜியாங் பகுதியில் நடந்த கலவரத்தின் போது மிகவும் தீவிரமான குற்றச்செயலில் ஈடுபட்டதாக சீனாவின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த பகுதியில் நடந்த கலவரத்தில் ஏறத்தாழ 200 பேர் கொல்லப்பட்டதாகவும், கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் உய்குர் கலவரக்காரர்களால் கொல்லப்பட்ட சீனாவின் ஹான் பிரிவை சேர்ந்தவர்கள் என்றும் சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆறு பேர்கள் எந்த பிரிவை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அவர்கள் பெயர்களின் அடிப்படையில் அவர்கள் உய்கூரை சேர்ந்தவர்கள் என்று கருதப்படுகின்றது.
கடந்த ஜூலை 5 ஆம் தேதி பொம்மை தொழிற்சாலையில் வேலைசெய்த பணியாளர்கள் தாக்கப்பட்டு இரண்டு பேர் கொல்லப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அந்த ஆர்ப்பாட்டம் கலவரமாக மாறியது.
இந்த தீர்ப்பினை அடுத்து உரும்கி பகுதியில் பலத்த காவல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆயுதம் ஏந்திய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக கிடைத்த தகவலின் படி ஏறத்தாழ 700 பேர் கலவரம் செய்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் எத்தனை பேர் தண்டிக்கப்படுவார்கள் என்பது தெரியவில்லை
நன்றி
அல் ஜசீரா.