இடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நடந்த சம்பவம்: சிதம்பரம்
سْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِي

பார்லியில் லிபரான் கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின் நடந்த விவாதத்துக்கு பதில் அளித்து சிதம்பரம் பேசியதாவது:பாபர் மசூதி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் மற்றும் மத்திய அரசிடம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பா.ஜ., தவறிவிட்டது. அதன் காரணமாகத்தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. பா.ஜ., அளித்த வாக்குறுதிகளை, அப்போதைய மத்திய அரசு நம்பியதன் விளைவாகவே இந்த விரும்பத்தகாத சம்பவம் நடந்தது. இது, மிகவும் வருத்தப்படவேண்டிய விஷயமாகும். சம்பவம் நடந்த அன்று காலை பா.ஜ., தலைவர் அத்வானி உள்ளிட்டோர் என்ன பேசினார்கள், விவாதித்தார்கள் என்பது தெரிவிக்கப்படவில்லை. பாபர் மசூதியை இடிக்க வேண்டும் என்ற தீர்மானத்துடனேயே, சங்க பரிவார் அமைப்பினர், தங்களது கைகளில் கடப் பாரை, சுத்தியல் போன்றவற்றை கொண்டு சென்றனர்.
இந்த விவகாரத்தில், அப்போதைய பிரதமர் நரசிம்மராவை பாதுகாக்க வேண்டிய அவசியம் காங்கிரஸ் கட்சிக்கு இல்லை. இந்த வழக்கை விசாரித்த லிபரான் கமிஷன் அறிக்கையில், அவரது பெயர் இடம்பெறாத போது இந்த கேள்வியே தேவை இல்லாதது.இது தொடர்பாக, கமிஷன் முன் ஆஜரான நரசிம்மராவ், பாபர் மசூதியை பாதுகாக்கத் தவறியதற்காக வருத்தம் தெரிவித்தார். இருப்பினும், பாபர் மசூதி இடிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்துபோன இந்து துறவி தேவ்ராணா பாபாவின் பெயரும், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரும் லிபரான் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளன. ஆனால், கமிஷன் முன், வாஜ்பாய் ஆஜராகவில்லை. இவ்வாறு சிதம்பரம் பேசினார்.
இதற்கிடையே, லிபரான் கமிஷன் அறிக்கையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் இடம்பெற்றுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ., எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, லோக்சபா இருபது நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது. அதுபோலவே, விவாதத்துக்கு பதில் அளித்து சிதம்பரம் பேசியபோதும், பா.ஜ., எம்.பி.,க்கள் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு இருந்தனர்.இதற்கிடையே, லிபரான் கமிஷன் அறிக்கையில் வாஜ்பாய் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதை காங்கிரஸ் ஆமோதித்துள்ளது.
நன்றி
தினமலர்
