முடிந்தால் மோதிப்பார் - ஈரானின் ஏவுகணை சோதனை

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ


கடந்த ஞாயிறு ஈரான் குறுகிய தூரம் சென்று தாக்கும் திறன் படைத்த இரண்டு ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்தது. இந்த சோதனை ஈரான் ரகசியமாக எழுப்பி வரும் அணு உலைகளுக்கு மேற்கத்திய நாடுகளிடமிருந்து எதிர்ப்பு கிளம்பிய இரண்டு நாட்களில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரானின் புரட்சிகர காவல் விமானப்படையின் தலைவர், தளபதி ஹுசைன் சலாமி இந்த ஏவுகணைச் சோதனைப் பற்றி கூறுகையில், "சோதனை செய்யப்பட்ட இரண்டு ஏவுகணைகளும் வெற்றிகரமாக தங்களது இலக்குகளை தாக்கின. ஈரான் இந்த ஏவுகணைகளை புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு மெருகேற்றியுள்ளது. இந்த தொழில்நுட்பம் மூலம் ஏவுகணைகள் தங்களுக்கு எதிராக தொடுக்கப் படும் எல்லா விதமான தாக்குதல்களிலிருந்து தங்களை பாதுகாத்து வெற்றிகரமாக இலக்கை சென்று தாக்கும் திறன் படைத்தது. (அமெரிக்கா Missile Defence System என்ற வகையில் தனக்கு எதிராக ஏவப்படும் ஏவுகணைகளை Patriot வகை ஏவுகணைகளை செலுத்தி தாக்கி அழிக்கும். தற்பொழுதுள்ள ஈரானின் ஏவுகணைகள் இந்த வித தாக்குதல்களிலிருந்து தங்களை பாதுகாத்து இலக்கை வெற்றிகரமாக தாக்கும் திறன் படைத்தது.)

சலாமி மேலும் கூறுகையில், நாங்கள் எங்களுக்கு எதிராக தொடுக்கப்படும் எந்த விதமான இராணுவ நடவடிக்கைகளையும் நசுக்கும் விதமாக பதிலடி கொடுப்போம், அது எந்த நாடாக இருந்தாலும் சரியே, எந்த ஆட்சியாக இருந்தாலும் சரியே" என்று கூறினார்.

ஈரான் தற்பொழுது நடத்திய இந்த ஏவுகணை சோதனைகள் ஈரானிற்கும் அமெரிக்க ஆதரவு மேற்கத்திய நாடுகளுக்கும் நடுவே இருக்கும் அணு சர்ச்சையை மேலும் மோசமடைய செய்துள்ளது.

ஈரான் தனது ஆயுதங்களையும் குறுகிய மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளை சோதனை செய்வதையும் வழக்கமாக கொண்டது. ஆனால் அது இந்த கால கட்டத்தில் நடத்திய ஏவுகணை சோதனை தனது பலத்தை தன் எதிரிகளின் முகத்தில் காட்டும் விதமாக உள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஈரான் மற்றும் ஜெர்மனி அடங்கிய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 5 நிரந்தர உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் விவாதம் ஜெனீவாவில் வருகிற அக்டோபர் 1 ம் தேதி நடக்க இருக்கும் சமயத்தில், ஈரான் தனது நிலையை உறுதிப் படுத்த கூடுதலாக ஏதாவது தேவை என்று நினைத்தது. அதன் ஒரு பகுதி தான் இந்த ஏவுகணை சோதனை என்று மத்திய கிழக்கு பகுதி குறித்த மூத்த ஆய்வாளர் அலெக்ஸ் வடங்கா கூறியுள்ளார்.

ஞாயிறு சோதனை செய்யப்பட்ட ஏவுகணைகள் தொண்டர் மற்றும் பதெஹ்110 ரக ஏவுகணைகள் ஆகும். இந்த ஏவுகணைகள் அணு ஆயுதங்களை தாங்கிச்செல்லும் வகையை சேர்ந்ததல்ல.

இந்த ஏவுகணை சோதனைகள், ஈரான் சர்வதேச கண்டனத்தையும் மீறி இரண்டாவதாக ஒரு யுரேனியம் செறியூட்டும் ஆலையை எழுப்பி வருகிறது என்று IAEA கூறியதற்கு இரண்டு நாட்கள் கழித்து நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்தேகத்திற்குரிய அணு உலை அறித் மலைப்பகுதியில் உள்ள கடுமையான காவல் நிறைந்த பூமிக்கு அடியில் அமைக்கப்பட்ட புரட்சிகர காவல் படையின் தளத்தில் இருப்பதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.

அமெரிக்க மற்றும் அதன் நட்பு நாடுகளின் தீவிர கண்டனத்திற்கு பிறகு ஈரான் ஐ.நா. அதிகாரிகளை இந்த அணு உலையை பரிசோதிக்க சம்மதித்துள்ளது.

என்றாலும் இதற்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பைக் காட்டியுள்ளது.

இந்த ஏவுகணை சோதனையின் மற்றொரு பகுதியாக மேலும் 3 ஏவுகணைகளை சோதிக்கப் போவதாக சலாமி தெரிவித்துள்ளார்.

படம்: சோதிக்கப்பட்ட ஏவுகணை
சர்ச்சைக்குரிய அணு உலை இருப்பதாக கூறப்பட்ட இடம்

நன்றி
அல்-ஜசீரா

Posted by Wafiq on Monday, September 28, 2009. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0

0 கருத்துரைகள் for முடிந்தால் மோதிப்பார் - ஈரானின் ஏவுகணை சோதனை

Post a Comment

இன்று

Enter your email address:

Delivered by FeedBurner

Designed by Solaranlagen | with the help of Bed In A Bag and Lawyers