இனி உலகத்தில் அமைதி நிலவும் --????

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

அமெரிக்காவின் அணு ஆயுத தடுப்பு நடவடிக்கை அடுத்தக் கட்டத்தை எட்டுகின்றது. அமெரிக்காவின் அணு ஆயுத தடுப்பு நடவடிக்கையின் படி எந்த ஒரு இஸ்லாமிய நாடும் அணு ஆயுதம் வைத்திருந்தால் அது உலகத்திலுள்ள அத்துணை நாட்டிற்கும் மிகப்பெரிய ஆபத்தாகும். அதனால் ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு நாட்டின் மேலும் பழி சுமத்தி அந்நாடுகளை சர்வதேச தீவிரவாதிகள் என்று கத்தி கூக்குரலிட்டு பின்பு அந்நாடுகள் மீது படையெடுத்து அதனை நிர்மூலமாக்கி முடிந்த அளவு அப்பாவி பொதுமக்களையும், குழந்தைகளையும் கொன்று, பெண்களின் கண்ணியத்தை சீரழித்து, அந்நாட்டு மக்களை கொல்வதும் கொடுமைபடுத்துவதும் அவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியவுடன் அங்கே தன் விரலசைவிற்கு கீழ்பட்டு நடக்கக்கூடிய ஒரு சுயமாக யோசிக்க தெரியாத தன்மானமில்லாத ஒரு நடமாடும் பிணத்தை பிரதமராக நியமித்து பின்னர் அந்நாட்டில் அமைதி ஏற்படுத்திவிட்டதாக கூறும்.

இதில் வேடிக்கை என்னவெனில் எந்தெந்த நாடுகளை தீவிரவாத நாடு என்று அமெரிக்கா ஆக்கிரமிக்கிறதோ அந்த நாடுகள் ஒரு காலத்தில் அமெரிக்க அடிவருடி நாடாக இருந்து அமெரிக்காவை திருப்தி படுத்துவதற்காக அது கேட்பதை எல்லாம் கொடுத்து உதவக்கூடிய நாடாக இருக்கும். எந்த அளவிற்கு என்றால், தன்னைப்போன்ற, இன்னும் தன் சகோதர்களை தாக்குவதற்காக தளம் கேட்கின்றது என்று தெரிந்தும் அமெரிக்காவிற்கு இடம் கொடுத்து அது செய்யும் அக்கிரமங்களை எல்லாம் கண்மூடி, கைகட்டி வாய் மூடி வேடிக்கை பார்க்கும். இதற்கு ஒரு சிறந்த உதாரணம் நமது சதாமும் ஈராக்கும் தான்.

முதலில் ஈரானை தாக்குவதற்காக ஈராக்கை பயன்படுத்திய அமெரிக்கா பின்பு அந்த ஈராக்கையே தாக்கி நிர்மூலமாக்கியது, காரணம் ஈராக்கிடம் இருந்த அணு ஆயுத தொழில்நுட்பம். ஈராக் தன்னை பாதுகாத்துக்கொள்ளகூடிய அளவிற்கு கூட தன்னிடம் ஆயுதம் இல்லை என்று கூறிய போதும் அது யூதர்களால் கட்டுப்படுத்தக்கூடிய அமெரிக்காவின் காதுகளுக்குள் நுழையவில்லை. தற்பொழுது ஈரானின் மேல் இதே குற்றத்தை சுமத்தி வருகிறது அமெரிக்கா. ஈரான் புத்திசாலிதனமாக தன்னுடைய தளவாடங்களை தயார் செய்து வைத்தால் அது பிழைப்பதற்கு சிறிதளவேனும் வாய்ப்புகள் உள்ளன.

இன்று ஈரான் அணு ஆயுத பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கூறியிருக்கிறது. எப்படியும் இன்னும் ஒரு நான்கைந்து மாதங்களில் ஈரான் தன் அணு சக்தியை ஆக்கபூர்வமான தேவைகளுக்கு தான் பயன்படுத்துகின்றது என்று தெளிவாகிவிடும். அதனை குறித்த ஐ.நா.வும் அறிக்கை விடும். அதன் பின்னர் அமெரிக்காவிற்கு ஈரானில் தன்னை தாக்கும் அளவிற்கு ஆயுதங்கள் இல்லை என்று தெளிவாகிவிடும். பின்பு வேறென்ன, ஈரான் மீது படையெடுப்பு தான்.

இனி, பல்லாயிரக்கணக்கான, ஏன் லட்சக்கணக்கில் கூட அப்பாவி மக்களை கொன்று குவிக்கலாம். ஈரான் தான் திருப்பி தாக்காதே. சரி, அடுத்து? இந்த அடுத்து என்ற கேள்விக்கயு தன் இவ்வளவு பெரிய முன்னுரை..

அடுத்து வேறெந்த இஸ்லாமிய, இல்லையென்றால் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கக்கூடிய நாடுகளில் அணுஆயுதங்கள் அல்லது அணு ஆயுத தொழில் நுட்பம் இருக்கின்றது என்று தேடவேண்டும். இல்லை இல்லை, அமெரிக்காவிற்கு தேடவேண்டிய வேலையெல்லாம் இனி இல்லை. அது ஏற்கனவே செய்தாகிவிட்டது. இனி தேடி வைத்த நாடுகளை ஏதாவது ஒரு குற்றம் சுமத்தி படைகளை அனுப்பு வேண்டியது தான் பாக்கி.

இந்த வரிசையில் தற்பொழுது அமெரிக்காவின் கண்களை உறுத்திக்கொண்டிருப்பது பாகிஸ்தான். என்ன, பாகிஸ்தானா? என்று உங்கள் மனதில் எழுகின்ற கேள்வி புரிகிறது. ஆனால் யதார்த்தம் அதுவே. ஈரானை பழிசுமத்திய கையோடு அடுத்த நாட்டிற்கு பிஸ்மில்லாஹ் சொல்லிவிட வேண்டும் அல்லவா. அதை தான் அமெரிக்கா செய்கின்றது.

நாம் தினசரிகளிலும் ஆன்லைன் பக்கங்களிலும் நிறையவே படித்திருப்போம், என்றாவது நமது சன் செய்திகளிலும் பார்த்திருப்போம், என்னவென்றால் பாகிஸ்தானின் எல்லைப்பகுதியில் அமெரிக்கா ஆளில்லா போர்விமானங்கள் அட்டூழியம். இன்று 100 பேர் அமெரிக்கா விமானத்தாக்குதலுக்கு பலியாகினர், இன்று 200 பேர் பலியானார்கள் என்று. இது வெறும் முன்னோட்டம் தான். சரி, தன்நாட்டு மக்கள் மீது தனது நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா தாக்குதல் நடத்துவதை கண்டிக்காமல் விட்டுவிடுமா என்ன? நல்ல கேள்வி தான். பாகிஸ்தானும் அமெரிக்காவிடம் இந்த கேள்வியை கேட்டதே. கேட்ட பின்பும் இந்த தாக்குதல் தொடர்வதற்கு சரியான காரணங்கள் இருக்கின்றது. ஆம், அமெரிக்கா என்றுமே தன் நட்பு நாடுகளை தொந்தரவு செய்யாது. இப்போது கூட அது தாக்குவது தன் நட்பு நாட்டினுள் ஒளிந்துகொண்டு அந்த நாட்டிற்கும் அந்நாட்டு அரசிற்கும் எதிராக சதி திட்டம் தீட்டி அந்நாட்டை சீர்குலைக்க தயாராகிக் கொண்டிருக்கும் அப்பாவி பொதுமக்களைத்தான். இல்லை இல்லை, மன்னிக்கவும், தாலிபான் தீவிரவாதிகளைத் தான்.

சரி, இது எல்லாம் பழைய சங்கதி, இப்போது புதிதாக என்ன இருக்கின்றது, மேலே சொல்லப்பட்டவைக்கும், அணு ஆயுதங்களுக்கும், ஈரான் ஈராக்கிற்கும் என்ன தொடர்பு? இப்பொழுது அமெரிக்காவின் அணு ஆயுத தடுப்பு நடவடிக்கைகளில் சிக்கிகொள்ளப் போவது பாகிஸ்தான். ஆம். பாகிஸ்தானின் அணு ஆயுத தொழில்நுட்பங்கள் தாலிபானின் கைகளுக்கு செல்லும் அபாயம் இருக்கிறதாம். இதனால் உலக நாடுகள் அனைத்திற்கும் ஆபத்து இருக்கின்றதாம். ஏற்கனவே இந்தியாவில் நடக்கக்கூடிய அனைத்து அசம்பாவிதங்களுக்கும் பாகிஸ்தான் குற்றம்சாட்டப்பட்டு வரும் வேளையில் இனி பாகிஸ்தானை தீவிரவாதத்திற்கு துணைபோகும் நாடு என்றோ அல்லது தீவிரவாத நாடென்றோ குற்றம் சாட்டுவது ஒன்றும் கடினமான வேலையல்ல. இனி அந்நாட்டிடம் இருக்கும் அணு ஆயுத தொழில்நுட்பங்களை பறித்தால் மட்டும் போதும். அதுவும் விரைவில் நாம் எதிர்பார்க்கலாம். இதிலிருந்து நமக்குள்ள படிப்பினை என்னவென்றால் அமெரிக்காவின் அதிபராக யார் பதவியேற்றாலும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா மீதான ஆதிக்கம் குறைய போவதில்லை. அது குறையாத வரை அமெரிக்கா முஸ்லீம்களை கொன்று ஒழிப்பதை நிறுத்தப்போவதில்லை.

எப்படியோ, அமெரிக்க அணு ஆயுத பரவல் தடுப்பு நடவடிக்கைகளினால் உலகம் அமைதிப் பூங்காவாக மாறப் போகிறது. அனால் அதனை காண்பதற்கு முஸ்லீம்கள் இருப்பார்களா என்று தான் தெரியவில்லை, அப்படி இருந்தாலும், அவர்கள் முஸ்லீம்களாக இருப்பார்களா என்று தெரியவில்லை. . .

Posted by Wafiq on Wednesday, September 16, 2009. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0

0 கருத்துரைகள் for இனி உலகத்தில் அமைதி நிலவும் --????

Post a Comment

இன்று

Enter your email address:

Delivered by FeedBurner

Designed by Solaranlagen | with the help of Bed In A Bag and Lawyers