ஹரியானாவில் 14 வயது சிறுமி கற்பழித்து கொலை
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
ஹரியானாவின் ரோத்தக் மாவட்டத்தில் 14 வயது சிறுமி தன் வீட்டின் அருகில் இருக்கும் சோனு சிங்க் என்பவனால் கற்பழித்து கொல்லப்பட்டாள். சம்பவம் நடந்த பொழுது அந்த சிறுமி தன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த சோனு சிங் அந்த சிறுமியை தன வீட்டிற்கு அழைத்து பின்பு அங்கு வைத்து அந்த சிறுமியை கற்பழித்ததாக தெரிகின்றது.இந்த கொடுஞ்செயலை செய்த பின்பு சோனு சிங், அந்த சிறுமி நடந்ததை அவளுடைய பெற்றோரிடம் சொல்லிவிடுவாள் என பயந்து தன்னுடைய தாயிடம் தான் செய்த கொடுஞ்செயல் பற்றி தெரிவித்துள்ளான். பின்னர் தாயும் மகனும் சேர்ந்து அந்த சிறுமியின் வீட்டிற்கு சென்று அவளை தீயிட்டு கொளுத்தியுள்ளனர். அச்சிறுமியின் கதறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தார் அங்கு வந்து எரிந்து கொண்டிருந்த அவளை காப்பாற்றி அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி உயிரிழந்தார்.
சிறுமியின் தந்தையான பப்பு குமார், "எனக்கு நீதி வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். சம்பவம் நடந்தபொழுது நாங்கள் வீட்டில் இல்லை" என்று கூறினார்.
"அவளை நாங்கள் மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றோம். நாங்கள் அவளை தூக்கிச்செல்லும் போது அவள் மிகவும் மோசமான நிலையில் இருந்தாள்" என்று அப்பகுதியை சேர்ந்த ஓம்பிரகாஷ் கூறினார்.
ரோத்தக் போலீஸ் சோனு சிங்கின் தாயான வித்யா தேவியை கைது செய்துள்ளனர். சோனு சிங் தலைமறைவாகிவிட்டான்.
இது குறித்து அப்பகுது சப் இன்ஸ்பெக்டர் ரந்திர் சிங் கூறுகையில், "நாங்கள் பப்பு குமாரின் புகாரை எடுத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளோம். சோனு சிங்கின் தாயும் இந்த கொடுஞ்செயலுக்கு அவனுக்கு உடந்தையாக இருந்துள்ளார். அதனால் அவளை நாங்கள் கைது செய்திருக்கிறோம். சோனு சிங்கையும் விரைவில் பிடித்து விடுவோம்" என்று அவர் கூறினார்.
போலீஸ் அந்த சிறுமியிடமிருந்து வாக்குமூலம் பெற இயலவில்லை. அவர்கள் அங்கு செல்வதற்குள் அவளுடைய உயிர் பிரிந்து விட்டது. ஆனால் சோனு சிங்கின் தாய் தான் இந்த குற்றத்தை செய்ததாக ஒப்புக்கொண்டு விட்டாள். தன் மகனோடு ரகசியமாக உறவு வைத்ததற்காக அவளை கொன்றதாக அவள் கூறினாள்.
ஹரியானாவில் தேர்தல் நேரம் நெருங்கிய போதிலும் அரசு மற்றும் அரசியல் கட்சிகள் பெண்களுக்கெதிரான கொடுமைகளில் சற்று கவனக் குறைவாகவே உள்ளனர்.
நன்றி
NDTV




