ஒபாமாவிற்கு ஒரு கடிதம்.

سْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ

அன்புள்ள அதிபர் ஒபாமா அவர்களே!

அமைதிக்கான மனிதராய் இன்று தாங்கள் அடையாளம் காணப்பட்டு இருப்பது எவ்வளவு பெரிய விஷயம்! ஈராக்கிலிருந்து இராணுவத்தைத் திரும்ப அழைக்கப் போவதாகச் சொன்னீர்கள். அணு ஆயுதமற்ற உலகை உருவாக்குவோம் என அறிவித்தீர்கள். ஈரானில் 1953ல் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அதிபரை நாம்(அமெரிக்கா) தலையிட்டு தூக்கி எறிந்ததை பகிரங்கமாக ஒப்புக்கொண்டீர்கள். கெய்ரோ மாநாட்டில் ‘பயங்கரவாதத்தை எதிர்த்த யுத்தம்’ என்னும் உபயோகமற்றச் சொல்லை இனி பயன்படுத்த போவதில்லை என இஸ்லாம் சமூக மக்களிடம் இணக்கமாக பேசினீர்கள். இவையெல்லாம்தான், கடந்த எட்டு வருட அழிவுகளில் இருந்து உலகத்தைக் கொஞ்சம் பாதுகப்பாக உணர வைத்திருக்கிறது. இந்த எட்டு மாதங்களில் தாங்கள் இந்த தேசத்தை ஆரோக்கியமான திசையில் அழைத்துச் சென்று கொண்டு இருக்கிறீர்கள்.

ஆனால்.....

ஆப்கானிஸ்தானத்தின் மீது அமெரிக்கா தொடுத்த போரின் ஒன்பதாவது வருடத்தின் இரண்டாவது நாளான இன்று தங்களுக்கு இந்த பரிசு கொடுக்கப்பட்டு இருப்பது வஞ்சப் புகழ்ச்சியாகவேத் தோன்றுகிறது. தாங்கள் இப்போது பலவழிகள் சந்திக்கின்ற முக்கியப் புள்ளியில் நின்று கொண்டு இருக்கிறீர்கள். ஒன்று, ஜெனரல்களின் பேச்சைக் கேட்டு யுத்தத்தை விரிவாக்க வேண்டும். அல்லது, புஷ் தொடர்ந்த யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது என இராணுவத்தைத் திரும்ப அழைத்தாக வேண்டும். அதுதான் ‘அமைதிக்கான உண்மை மனிதன்’ செய்தாக வேண்டியது.

உங்களுக்கு முந்தைய மனிதனைப் போலவே, செப்டம்பர் 11ல் இங்கு 3000 மனிதர்களைக் கொன்றவனையும் அதற்கு காரணமானவர்களையும் பிடிக்க வேண்டும் என்று தாங்களும் நினைப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் அதனை பீரங்கிகளாலும், இராணுவத் துருப்புகளாலும் செய்ய முடியாது. நீங்கள் ஒரு கிரிமினலோடு சண்டை போடுகிறீர்கள். இராணுவத்தோடு அல்ல. எலிகளை விரட்ட டைனமேட் வெடிக் குச்சிகள் எதற்கு?

அப்புறம் தலிபான்கள். அது அந்த ஆப்கானிஸ்தானத்து மக்களே தீர்வு காண வேண்டிய பிரச்சினை. அப்படித்தானே நாம் 1776ல் செய்தோம். 1789ல் பிரான்சு செய்தது. 1959ல் கியூபா செய்தது. 1989ல் கிழக்கு பெர்லின் செய்தது. ஒன்று நிச்சயம். மக்கள் தங்களுக்கான சுதந்திரத்தை தாங்களே கொண்டு வந்து சேர்த்து விடுவார்கள். மற்றவர்கள் அதற்கு துணை வேண்டுமானால் செய்யலாம், ஆனால் டிரைவராக இருக்க முடியாது.
இப்போது ஆப்கானிஸ்தானத்தில் நமது தலையீட்டை உடனடியாக தாங்கள் நிறுத்த வேண்டும். முடியவில்லையென்றால், பரிசை ஆஸ்லோவிற்கு திருப்பி அனுப்புவதைத் தவிர வேறு வழியில்லை.


உங்களது
மைக்கேல் மூர்.

நன்றி,
மாதவராஜ் வலைப்பதிவு.

Posted by Mohideen on Thursday, October 15, 2009. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0

0 கருத்துரைகள் for ஒபாமாவிற்கு ஒரு கடிதம்.

Post a Comment

இன்று

Enter your email address:

Delivered by FeedBurner