இங்குஷ்டியா - மீண்டும் ஒரு செச்சென்யா???

سْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ


கடந்த அக்டோபர் 25 ல் ரஷியாவின் இங்குஷ் பகுதியின் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் தொழிலதிபரான மக்ஸரிப் ஆஷேவ் என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். (வழக்கமாக இந்த அடையாளம் தெரியாத நபர்கள் அராசாங்க காசுக்கு வேலை செய்பவர்களாகத் தான் இருப்பார்கள்). இவருடைய காரை நோக்கி 60 குண்டுகள் சுடப்பட்டன.

இவரது மரணத்திற்கு சிறிது முன்னதாக இவர் இங்குஷ் பகுதியில் நடக்கும் பிரச்னையை மையமாக வைத்து படமெடுப்பது பற்றி டாம் ரோதேர்டோ மற்றும் அந்தோனி பட்ஸ் என்பவர்களுடன் பேசியிருக்கிறார்.

சமீபகாலமாக ரஷியாவின் இங்குஷ்டியா பகுதி மிகவும் ஆபத்தான பகுதியாக மாறி வருகின்றது. இங்கு ரஷ்ய படைகளுக்கும் இஸ்லாமிய போராளிகளுக்கும் கடும் சண்டை நடந்து வருகின்றது.

இந்த போராட்டத்தின் காரணமாக இங்குஷ் பகுதியின் மக்கள் பலர் காணாமல் போயுள்ளனர். இங்கே மனித உரிமைகள் கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவிற்கு மலிவாகிவிட்டது. மக்கள் அரசாங்கத்தின் மீதும் அதிகாரிகள் மீதும் வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவிட்டனர்.

இங்குஷ்டியா பகுதியில் முராட் யாசிகொவ் என்பவரை அதிபராக புதின் நியமித்ததிலிருந்து மக்களுக்கு அரசாங்கத்தின் மேல் இருந்த அதிருப்தி அதிகமாகிக் கொண்டே போனது. 2004 ஜூன் மாதம் போராளிகள் ரஷ்ய பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் பல பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த பகுதியில் ரஷ்ய படையினர்களுக்கும் போராளிகளுக்கும் இடையே நடக்கும் போரின் நடுவே சிக்கித் தவிப்பது 500000 மக்கள் தான்.

இது குறித்து மக்ஸரிப் ஆஷேவ் ஒரு முறை கூறுகையில், "நான் துப்பாக்கி வைத்திருப்பதற்கு காரணமே இந்த பகுதி மிகவும் ஆபத்தான பகுதி என்பதால் தான்.

இங்கே எந்நேரமும் ரஷ்ய படைகள் உங்களை மாறுவேடத்தில் வந்து கடத்திச் செல்லலாம், நீங்கள் காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்க்கப்படுவீர்கள்" என்று கூறினார்.

"இந்த துப்பாக்கி உங்களை எப்படியும் காப்பற்ற போவதில்லை என்றாலும் நீங்கள் அவர்களை எதிர்த்து ஏதாவது செய்ய அது உதவும். அதனால் மற்ற மக்கள் காணாமல் போவதுபோல் நீங்கள் அவ்வளவு எளிதில் காணாமல் போய் விட மாட்டீர்கள்" என்று அவர் கூறியிருக்கின்றார்.

ஒரு வணிகராக மட்டும் இருந்த ஆஷேவின் சாதரணமான வாழ்க்கையை அவரது மருமகனை ரஷ்ய படைகள் கடத்திச்சென்ற சம்பவம் தலைகீழாக மாற்றிப்போட்டது.

இவரது மருமகன் ரஷியா படைகளுக்கு தகவலாளி (Informer) ஆக இருக்க மறுத்ததால் அவர் கடத்தப்பட்டார். மேலும் இவரின் மகன் ரஷ்ய படைகளால் ரயிலிலிருந்து கடத்திச் செல்லப்பட்டார்.

இருவரும் செச்சென்யாவிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

"என் மகனும் எனது மருமகனும் கடத்திச்செல்லப்பட்ட பின்பு தான் நான் அரசியலிற்கு வந்தேன் என்றும் எனக்கு அதற்கு முன்பு அரசியலில் துளி கூட ஆர்வம் கிடையாது என்றும் அவர் கூறினார். ஆனால் நான் அரசியலில் நுழைய கட்டாயப் படுத்தப் பட்டுள்ளேன்."

இவர்களை கடத்திச்சென்ற ரஷ்ய பாதுகாப்பு படையான FSB யினை எதிர்த்து ஆர்பாட்டம் செய்தார். இதனை அடுத்து அவரின் காணமல் போன மகனும் மருமகனும் மீண்டும் அவருக்கு கிடைத்தனர்.

இதனை அடுத்து அவர் தனது பிரச்சாரத்தை விரிவு படுத்தினார். இதன் மூலம் அவர் எதிர்க்கட்சி தலைவராக பிரபலமடைந்தார்.

முஹமது முத்சொல்கோவ், இவர் மஷர் என்ற மனித உரிமை அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர். இவரின் கூற்றுப்படி சியாசிகொவ் என்பவர் அந்த பகுதிக்கு அதிபரான பின்னரே ரஷ்ய பாதுகாப்பு படையின் இதுபோன்ற அத்துமீறல்கள் எல்லை மீறிப் போக ஆரம்பித்தன என்கிறார். இந்த சியாசிகொவ் ரஷ்ய உளவுப்படையான KGB இல் பணியாற்றியுள்ளார். மேலும் இவர் புதினிற்கு மிக நெருங்கியவராவார்.

இந்த முத்சொல்கோவ் தனது மனித உரிமை அமைப்பை தொடங்குவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அவரது இளைய சகோதரர் காணமல் போயுள்ளார் அல்லது ரஷ்ய படையினரால் கடத்தப்பட்டுள்ளார்.

மொத்தமாக இதுவரை 500 புகார்கள் காணாமல் போன்றவர்கள் குறித்து பதிவாகியுள்ளது. மேலும் பலர் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர் என்று முத்சொல்கோவ் கூறுகின்றார்.

இந்த பகுதியில் வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. 2008 இல் மட்டும் 212 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2009 இல் ஆகஸ்ட் மாதத்திலேயே கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 212 தாண்டிவிட்டது என்று மஷர் மனித உரிமை அமைப்பு கூறுகின்றது.

இது அல்லாது இஸ்லாமிய போராளிகள் 200 க்கும் மேற்பட்ட காவல் துறையினர், ரஷ்ய பாதுகாப்பு படையினர் மற்றும் அரசு அதிகாரிகளை கொன்றுள்ளனர்.

இதில் மிகவும் மோசமான தாக்குதல் 2009 ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இதில் ஒரு போராளி வெடிபொருள் நிரப்பிய வாகனம் ஒன்றை காவல் நிலையத்தில் மோதி வெடிக்கச்செய்தார். இந்த சம்பவத்தில் 24 பேர் கொல்லப்பட்டனர், 160 பேர் படுகாயமடைந்தனர்.

சமீபகாலமாக, தனி நாடு கேட்டு போராடிவந்த செச்சென்யா போராளிகள் ஷரியாவை அடிப்படையாக கொண்ட இஸ்லாமிய குடியரசு நிறுவுவது என்று தங்கள் கொள்கைகளை மாற்றியுள்ளனர்.

இஸ்லாமிய போராளிகளை அழிக்கிறோம் என்கிற பெயரில் பல சட்டத்திற்கு புறம்பான படுகொலைகள் அரசு பாதுகாப்பு படையினராலேயே நடத்தப்படுவதாக பலர் சந்தேகிக்கின்றனர்.

ரஷ்ய பாதுகாப்பு படையான FSB யின் அதிகாரிகள் அந்த பகுதி காவலர்களை கொல்லும்போது பிடிபட்டும் உள்ளனர்.கூடவே மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதன் மூலம் ரஷ்ய பாதுகாப்பு படையான FSB மீது சந்தேகம் வலுத்து வருகின்றது.

மனித உரிமை ஆர்வலரான அஸ்லேம்பேக் பேவ் கூறுகையில், "நாம் செய்யும் ஒவ்வொன்றும் கண்காணிக்கப்படுகின்றன. நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும், அனேகமாக அடுத்தது நானாகத்தான் இருக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

மேலும் இதில் பெரிய வித்தியாசம் என்ன இருக்கின்றது. எப்படியும் நாங்கள் கொல்லப்படுவோம், எங்களை அவர்கள் கொன்று விடுவார்கள்" என்று கூறினார்.

தற்பொழுது கொல்லப்பட்ட மக்ஸரிப், அவர் மரணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன் அரசு கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு திரும்பும் போது பாதுகாப்பு படையினரால் சிறைபிடிக்கப்பட்டார். பின்பு அந்த பாதுகாப்பு படையை மோட்டார் பைக்கில் வந்த கூட்டம் வழிமறித்து சூழ்ந்து கொள்ளவே அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இது பற்றி அவர் முன்பு கூறுகையில், சற்று தாமதமாகியிருந்தாலும், நான் எந்த தடயமும் இல்லாமல் காணமல் போயிருப்பேன்" என்று கூறியிருந்தார்.

இது போன்ற செயல்கள் இந்த பகுதியில் மனித உரிமைகள் காற்றில் பறக்க விடப்படுவதை குறிக்கின்றன.

நன்றி,
அல் ஜசீரா.

Posted by Mohideen on Thursday, October 29, 2009. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0

0 கருத்துரைகள் for இங்குஷ்டியா - மீண்டும் ஒரு செச்சென்யா???

Post a Comment

இன்று

Enter your email address:

Delivered by FeedBurner