அமெரிக்காவில் ராணுவ மையத்தில் துப்பாக்கி சூடு - 13 பேர் பலி
سْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ

மேஜர் நிடால் மாலிக் ஹஸன் (Nidal Malik Hasan), 39 வயது, அமெரிக்க ராணுவத்தில் மனநோய் மருத்துவராக சேவை செய்து வருகிறார். வெள்ளியன்று அமெரிக்கா போர் புரிந்து வரும் பகுதிக்கு பணியில் செல்ல இருந்தார். அவர் ஈராக்கிற்கு செல்ல இருந்தாரா அல்லது ஆப்கானிஸ்தானிற்கா என்பது பற்றி தெளிவான தகவல்கள் இல்லை. தனது அண்டை வீட்டிலுள்ள பேட்ரிஸியா வில்லா (Patricia Villa) என்ற பெண்மணியை வியாழனன்று அவரது இல்லத்தில் சந்தித்து, தான் வெள்ளியன்று போர் முனைக்கு பணிநிமித்தமாய் செல்வது தெரிவித்து விட்டு தனது வீட்டிலிருந்து சில பொருட்கள், ஒரு குர்ஆன் ஆகியனவற்றை கொடுத்துள்ளார்.
ராணுவ மையத்தில் போர் முனைக்கு செல்ல நியமிக்கப்பட்டிருந்த வீரர்கள் 300 பேர் வரை கண் பரிசோதனைக்காகவும், தடுப்பூசி பெறுவதற்காகவும் வரிசையில் நின்றிருக்கும் போது மாலிக் அங்கு சரமாரியாக சுட ஆரம்பித்திருக்கிறார். பலர் அடிபட்டு விழ சுதாரித்துக் கொண்ட சில வீரர்கள் பதிலுக்கு அவரை துப்பாக்கியால் சுட்டு அவரை செயலிழக்கச் செய்திருக்கின்றனர்.
இச்சம்பவம் குறித்து ராணுவ அதிகாரிகள் பலத்த அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். அவரின் இந்த செயலுக்கான காரணம் இன்னும் விளங்கப்படாமலிருக்கிறது. அவருடன் பணிபுரிந்த மாலிக் சில சமயங்களில் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் நடைபெற்று வரும் போர் குறித்து சில சமயங்களில் கோபம் வெளிப்படுத்தியுள்ளதாய் தெரிவித்துள்ளார். அவரின் ஓர் உயரதிகாரி மாலிக்கின் பணி ஈடுபாடு குறித்தும் நோயாளிகளிடம் அவர் காட்டி வந்த அபரிமிதமான அக்கறையையும் சிலாகித்துக் கூறியுள்ளார். இது நாள் வரை அவர் ராணுவத்திற்கு ஒரு மதிப்பு வாய்ந்தவரே என்று தான் கருதி வந்ததாக மற்றொரு ராணுவ மருத்துவ சேவை மையத்தின் அதிகாரி கர்னல் கிம்பர்லி கெஸ்லிங் (Kimberly Kesling) கருத்து தெரிவித்துள்ளார். அவரது பணியிலோ நடவடிக்கையிலோ இது வரை எந்தக் குறையுமே இல்லை என்று அவர் பணிபுரிந்த மருத்துவமனையிலுள்ள மற்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
”இந்தச் சம்பவத்தில் எந்த வெளி அமைப்பும் சம்பந்தப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. ஒரு தனிப்பட்ட மனிதர் தனது சுய விருப்பத்திலேயே தனது சகாக்களை சுட்டுக் கொன்றுள்ள சம்பவமே இது” என்று உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் செயலாளர் ஜேனட் நெப்போலிடானோ (Janet Napolitano) கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த விசாரனையை ராணுவம் முழு வீச்சில் முடுக்கிவிட்டுள்ளது. மாலிக் ஹஸன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நன்றி,
இந்நேரம்.
நன்றி,
இந்நேரம்.
