சுவிட்சர்லாந்தில் மினாராக்கள் கட்டுவதற்கு அந்நாட்டு அரசு எதிர்ப்பு
سْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ

சுவிட்சர்லாந்தின் Federation of Islamic Organizations என்ற அமைப்பின் தலைவரான ஹிஷாம் மைசர் இந்த பிரச்சனை பற்றி கூறுகையில், "நாங்கள் எங்களது அடையாளத்தை மினாராக்கள் மூலம் தற்காத்துக் கொள்கிறோம்" என்று கூறினார்.
வருகிற நவம்பர் 29 ல் சுவிட்சர்லாந்தின் மக்கள் அந்நாட்டில் மினாராக்கள் கட்டப்படலாமா கூடாதா என்பது குறித்து வாக்களிக்க உள்ளனர். இந்த வாக்கெடுப்பு SVP என்ற சுவிட்சர்லாந்தின் அரசியல் கட்சி ஒன்றினால் ஏற்படுத்தப் பட்டது. இது சுவிட்சர்லாந்தில் மினாராக்கள் கட்டக்கூடாது என்று இந்த வாக்கெடுப்பை நடத்துகிறது.
இந்த மினாராக்கள் மீதான தடை பற்றிய செய்தி அந்த நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்நாட்டின் ரோமன் கத்தோலிக்க பாதிரியார்கள், "மக்களை மினாராக்கள் மீதான தடையை அங்கீகரிக்க வேண்டாம்" என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
மைசர் இந்த வாக்கெடுப்பு பற்றி கூறுகையில், "மக்கள் எப்படியும் இந்த தடைக்கான வாக்கெடுப்பில் மினாராக்களுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன்" என்று கூறினார்.
Amnesty International என்ற பிரபல மனித உரிமை அமைப்பு, "இந்த மினாராக்கள் மீதான தடையை முஸ்லீம் மக்களுக்குள் பயத்தை ஏற்படுத்துவதற்காகவும் மற்ற மக்களிடையே முஸ்லீம்கள் மீதான பயத்தை ஏற்படுத்தி அதில் அரசியல் ஆதாயம் தேடவும் ஏற்படுத்த பட்டது" என்று எச்சரித்து உள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் கிறித்தவத்திற்கு அடுத்ததாக இஸ்லாம் தான் பெரும்பான்மையான வழிபாட்டு மார்க்கம். ஆனால் இங்கு நான்கு பள்ளிவாசல்களில் மட்டுமே மினாராக்கள் உள்ளன.
சுவிட்சர்லாந்தின் முஸ்லீம் தலைவர்கள் மினாராக்கள் மீதான இந்த தடை முஸ்லீம்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் முதல் படி என்று கூறுகின்றனர்.
அதேபோன்று," இந்த தடையோடு இஸ்லாத்திற்கெதிரான சக்திகள் நின்று விடப்போவதில்லை என்றும், இன்னும் என்னென்ன வழிகளில் அவர்கள் இஸ்லாம் மற்றும் முஸ்லீம்களை அந்த நாட்டில் ஒடுக்கலாம் என்றும் தேடி அத்தகைய வழிகளையும் பின்பற்றுவார்கள்" என்று மைசர் கூறினார்.
மினாராக்கள் மீதான தடை, சுவிட்சர்லாந்தில் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லீம்கள் மீதான தடையின் ஆரம்பம் என்று அவர் மேலும் கூறினார்.
மேலும் அந்த அரசியல் கட்சி தனது இஸ்லாமிய எதிர்ப்பு போக்கை எப்போதுமே ரகசியமாக வைத்துக் கொண்டதில்லை என்றும் அது பகிரங்கமாகவே இஸ்லாத்தை எதிர்த்து வருகின்றது என்றும் அவர் கூறினார்.
மைசர் அந்த கட்சியினர் உடனான தனது சந்திப்பின் நிகழ்வுகளை கூறும்பொழுது,
"மினாராக்கள் மீதான உங்களது தடை ஏற்றுக்கொள்ளப்பட்டால் உங்களுக்கு வேறு ஏதாவது கோரிக்கைகள் இருக்கின்றனவா என்று கேட்டதற்கு அவர்கள் ஆம், எங்களுக்கு இஸ்லாம் மற்றும் முஸ்லீம்களுடன் ஒரு சில பிரச்சனைகள் இருக்கின்றன, அதனை நாங்கள் பின்னர் ஆலோசித்துக்கொள்வோம்" என்றனர்.
பின்னர்," இந்த தடை தான் தங்களது முதல் நடவடிக்கை என்று அழுத்திக் கூறினர்" என்று மைசர் அந்த இஸ்லாமிய எதிர்ப்புவாதிகளுடனான தனது சந்திப்பை நினைவு கூர்ந்தார்.
சுவிட்சர்லாந்தின் முஸ்லிம் லீக்கின் தலைவரான அடேல் அல் மகரி கூறும்பொழுது, "சட்டம் முஸ்லிம்,முஸ்லிம் அல்லாதோர் மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் தங்களது வழிபாட்டு முறைக்கான அடையாளத்தை கொண்டாடுவதற்கு முழு அதிகாரத்தை கொடுத்துள்ளது. இதனை அவர்கள் எவ்வாறு முஸ்லீம்களிடமிருந்து பறித்திட முடியும்" என்று அவர் கூறினார்.
மகரி மேலும் கூறுகையில், "சுவிட்சர்லாந்தின் முஸ்லீம்கள் தங்கள் மத மற்றும் சமுதாய அடையாளத்தை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும், அதே சமயம் தேசத்தின் பாதுகாப்பு மற்றும் சமூக அமைதியையும் பாதுகாக்க வேண்டும்" என்று கூறினார்.
நன்றி,
ABNA.
