குவாண்டனமோ - தொடரும் அவலங்கள்

سْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ

2008 பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பொழுது முஹம்மது எல் கரணி குவாண்டனாமொவிலுள்ள அமெரிக்க சித்திரவதை கூடத்தில் தனியே அமர்ந்திருந்தார்.

ஒபாமா பதவி ஏற்ற பொழுது மொத்த உலகமும், அமெரிக்கா இனி மாறிவிடும், ஒபாமா அதனை மாற்றப் போகிறார் என்று எதிர் பார்த்துக்கொண்டிருந்த போது குவாண்டனாமோ சிறையில் உள்ளவர்களோ இனி நம்மை மனிதர்களை போலாவது நடத்தப் போகிறார்கள் என்று நம்பிக்கொண்டிருந்தனர்.

கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவின் அந்த சித்திரவதைக் கூடத்திலிருந்து வெளியேறிய கரணி, தன்னுடன் இருந்தவர்கள் எல்லாம் நம்பிக்கையுடன் இருந்தனர், அவர்கள் இனி எல்லாம் மாறப்போகின்றது, இந்த மனிதநேயமற்ற சிறைச்சாலை மூடப்பட இருக்கின்றது என்று கனவு கண்டு கொண்டிருந்தனர். அந்த சிறைச்சாலையின் காவலர்கள் கூட ஒபாமா இந்த தேர்தலில் ஜெயித்தால் உங்களது நிலைமை முன்னேறும் என்று கூறியிருந்தார் என கரணி கூறுகின்றார்.

ஆனால் அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. ஒபாமா பதவியேற்று ஓராண்டு முடியப்போகிறது. ஒபாமா குவாண்டனாமோ சிறைச்சாலை மூடப்படும் என்று அறிவித்திருந்தாலும் கைதிகளின் நிலை சமீபகாலமாக மோசமடைந்து வருகிறதே தவிர முன்னேற்றம் காணவில்லை. கைதிகளின் இந்நிலையை ஒபாமா அறிந்தே இருக்கின்றார் என்றும் கூறப்படுகிறது.

சிறை அதிகாரிகள் கைதிகள் மீதான உரிமை மீறல்களை மறுத்த போதிலும் இந்த சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருந்து பின்னர் விடுதலையானவர்கள், சிறையிலிருந்து கடிதம் எழுதியவர்கள் மற்றும் சுதந்திரமாக செயல் படும் மருத்துவக் குழுக்களின் சான்றுகள் ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும் பொழுது கைதிகள் மனதளவில் மற்றும் உடலளவில் மிகவும் மோசமான நிலையில் நடத்தபடுகின்றனர் என்று கூறுகின்றனர்.

Enhanced Interrogation என்று பெயர் சூட்டப்பட்டுள்ள சித்திரவதை முறைகள் பயன்படுத்தப்படவில்லை என்று கூறப்பட்டாலும் கைதிகளின் அன்றாட வாழ்க்கை இங்கு மிகவும் மோசமடைந்து வருகின்றது என்று கூறுகின்றனர்.

ஒபாமா பதவியேற்ற சில நாட்களை தொடர்ந்து இந்த சிறைச்சாலைகள் மூடப்படும் என்ற அறிவிப்புகள் வந்தாலும், புதிய விதிமுறைகள் என்கிற பெயரில் சிறை அதிகாரிகள் தங்களுக்கு முன்னர் கொடுக்கப்பட்ட உரிமைகள் எல்லாம் மறுக்கின்றனர் என்று கைதிகள் கூறுகின்றனர்.

கைதிகள் குழுமும் பொழுது போக்கு நேரம் மட்டும் தான் அவர்கள் மற்றவர்கள் முகங்களை பார்க்கும் நேரம், அதையும் நிறுத்தி கைதிகளை தனிமை படுத்திவிட்டதாக கரணி கூறுகிறார். மேலும் அதிகாரிகள் கைதிகளிடமிருந்த புத்தகங்களையும் பிடுங்கிவிட்டதாகவும், கைதிகள் தூங்கும் பொழுது Pepper Spray ஐ கைதிகளின் அறைக்குள் செலுத்தி அவர்களை மூச்சு திணறடிக்கிறார்கள் என்று கரணி கூறினார். தானும் இது போன்ற கொடுமைகளுக்கு பல முறை ஆளாக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

மேலும் அவர் சிறை அதிகாரிகளால் மிகவும் மோசமாக தாக்கப்பட்டதாகவும் அதன் பாதிப்பினால் அவருக்கு இன்றளவும் உடலில் வலி ஏற்பட்டு வருவதாவும் கரணி கூறினார்.

அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு குவாண்டனாமோ சிறையில் இன்றளவும் கைதிகளாக்கப்பட்டு கொடுமைகளை அனுபவித்து வரும் கைதிகளின் கடிதங்களும் இப்படியே கூறுகின்றன.

மார்ச் மாதம் ஒரு கைதி எழுதிய கடிதத்தில் தன் பெயரை அதிகாரிகளின் எதிர்விளைவுகளுக்கு பயந்து குறிப்பிடாமல் அவர் கூறியதாவது,"ஒபாமா பதவி ஏற்றதிலிருந்து தங்களின் நிலை இன்னும் மோசமடைந்து தான் வருகின்றன" என்று அவர் கூறினார்.

"மேலும், நான் அதே அறையில் தான் அடைக்கப்படுகின்றேன், அதே சீருடை தான் அணிகின்றேன், அதே உணவு தான் சாப்பிடுகிறேன் ஆனால் 2008 இன் நடுப்பகுதியில் நடத்தப்பட்டதை விட இன்னும் மோசமாகவே நடத்தப்படுகின்றேன் என்று அவர் எழுதியிருக்கின்றார். மேலும் , நாங்கள் இது போன்ற கட்டுப்பாடுகளின் நோக்கத்தினை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை" என்று அவர் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தின்படி சிறை அதிகாரிகள் கைதிகளுக்கு கேவலப்படுத்தக்கூடிய பல தண்டனைகளை கொடுப்பதாகவும், கைதிகளை அதிகாரிகள் வேண்டுமென்றே மனதளவிலும் உடலளவிலும் காயப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

புதிய நிர்வாகத்தின் வரவினால் நிலைமை இன்னும் மூச்சமடைந்துவிட்டது என்று அந்த பெயர் குறிப்பிடாத கைதி எழுதியுள்ளார். மேலும் இந்த ஆண்டு ஜனவரி முதல் புதிய பல சட்டங்களை சிறை நிர்வாகம் நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டங்கள் மனித வாழ்வுக்கு உகந்த கடைசி தரத்தை விடவும் குறைவானதாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது அல்லாமல் இரண்டு கைதிகள் தங்களது வழக்கறிஞர்களிடம் தனித்தனியே, "தங்களது படுக்கைகள் உட்பட தங்களது உடமைகளை சிறை அதிகாரிகள் அவ்வப்போது எந்த காரணங்களும் இல்லாமல் அகற்றி விடுவதாக முறையிட்டுள்ளனர். ஒவ்வொரு முறையும் அவை தவறாக அகற்றப்பட்டது என்று கூறி அதனை திருப்பி கொடுத்துள்ளனர், என்றாலும் இவை தொடர்கதையாகவே உள்ளன" என்று அவர்கள் கூறியுள்ளனர்.

அந்த இருவர் இன்னும் கூறியதாவது, "இஸ்லாமிய புனித மாதமான ரமலானில் கைதிகள் கூடுவதற்கான பொழுதுபோக்கு நேரம் கூட கைதிகள் சேர்ந்து தொழுகை நடத்த கூடாது என்பதற்காக மாற்றி அமைத்துவிட்டனர்" என்று அவர்கள் கூறியுள்ளனர்.

ஒருவரின் மதத்தினை கைதிகளை தண்டிக்கப் பயன்படுத்துவது சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் குற்றமாகும். ஆனால் சர்வதேச சட்டமெல்லாம் அமெரிக்காவிற்கு தொடர்பில்லாதவர்களுக்கு மட்டும் தானே. சர்வதேச சட்டங்களை அமெரிக்கா மதித்து நடந்த நாள் என்ற ஒன்று உலக சரித்திரத்திலேயே காண முடியாதது.

சிறை அதிகாரிகளிடம் இது பற்றி கேட்டதற்கு வழக்கம் போல் அவர்கள் இதனை மறுத்துள்ளனர், என்றாலும் பாதுகாப்பு காரணங்களுக்காக பொழுது போக்கு நேரங்களை மாற்றியதாக அவர்கள் கூறுகின்றனர்.

மேலும் கைதிகளின் உடைமைகள் அகற்றப்பட்டதைக் குறித்து கூறுகையில், அவர்கள் அதனை துஷ்பிரயோகம் செய்யாதவரை அவற்றை நாங்கள் அகற்றுவதில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர். சிறை அதிகாரிகளின் இந்தக் கூற்றை கைதிகள் முற்றிலுமாக மறுத்துள்ளனர்.

குவாண்டனாமோ கைதிகளின் நிலை பற்றி கண்காணித்து வரும் International Committee of the Red Cross (ICRC) என்ற அமைப்பு கைதிகளை சிறை அதிகாரிகள் துன்புறுத்துவது பற்றிய சில கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டது.

இந்த அமைப்பின் செய்தி தொடர்பாளரான Simon Schorno கூறுகையில், "கைதிகள் மீது பயன்படுத்தப்படும் சில முறைகள் முற்றிலும் சித்திரவதைக்காகவே உருவாக்கப்பட்டது என்றும் இன்னும் மற்றும் சில முறைகள் ஒரு முறை அல்லது இரு முறை பயன்படுத்தப்பட்டால் தீங்கு விளைவிக்காது என்றும் ஆனால் அதனை தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டால் அது கைதிகளை பாதிக்கும்" என்று அவர் கூறினார்.

குவாண்டனாமோ சிறையின் சித்திரவதைக்கான முறைகள் நாம் கனவிலும் நினைத்துப்பாராதவை. இவற்றை எல்லாம் வைத்துக்கூட மனிதர்களை சித்திரவதை செய்வார்களா என்று நாம் ஆச்சர்யப்பட்டு முடிப்பதற்குள் மற்றுமொரு புதிய விதமான சித்திரவதை முறையை கண்டு பிடித்துவிடுவார்கள் அமெரிக்கர்கள். அவர்கள் இதற்கென்று தனி துறை வைத்து மனிதர்களை எவ்வாறெல்லாம் சித்திரவதை செய்யலாம் என்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் தாங்கள் இயற்றிய இசையை கொண்டு கைதிகளை சிறை அதிகாரிகள் சித்திரவதை செய்ததற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது இரு இசை அமைப்பாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். அவர்களின் இசையினை காதுகள் கிழியும் அளவிலான சப்தத்தில் வைத்து கைதிகளை அந்த இசையினை கேட்குமாறு தொடர்ந்து இரண்டு அல்லது அதற்கும் மேலான நாட்கள் விட்டுவிடுவார்கள். ஒரு மணி நேரம் கூட தொடர்ந்து கேட்க முடியாத சப்தத்தை இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து கேட்பவரின் கதி???

இது ஒரு சாம்பிள் தான். இது போல நம் கற்பனைகெட்டாத இன்னும் பல சித்திரவதை முறைகளை கைதிகள் மீது குவாண்டனாமோ சிறையில் பயன்படுத்தி வருகிறார்கள்.

இன்னும் தாங்கள் மிகவும் மோசமாக நடத்தப்படுவதை எதிர்த்து உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு கட்டாயப்படுத்தி உணவளிக்கிறார்கள். இதனால் கைதிகளின் நிலை இன்னும் மோசமடைந்துள்ளது.

அப்துல் ரஹ்மான் ஷலபி என்பவர் கடந்த 2005 இல் இருந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றார். ஆனால் அவருக்கு ஒரு நாளைக்கு இரு முறை கட்டாயப்படுத்தி உணவளிக்கின்றனர். இந்த கட்டாயப்படுத்தி உணவளிப்பது என்ற முறையை எவ்வாறு செயல் படுத்துவார்கள் என்றால், கைதியின் மூக்கின் வழியாக குழல்களை நுழைத்து அதன் வழியாக திரவ வடிவிலான உணவை செலுத்துகின்றனர். இதன் மூலம் உண்ணாவிரதமிருக்கும் கைதிகளை அவர்கள் உயிருடன் வைத்துக்கொள்கின்றனர்.

ஆனால் இவரை பரிசோதித்த சுதந்திரமாக செயல் படும் மருத்துவர்கள் கூறுகையில், "இது போன்று மூக்கின் வழியாக குழல்களை நுழைப்பதால் ஷலபியின் மூக்கு மற்றும் தொடைப்பகுதிகள் நிரந்தர சேதமடைந்துவிட்டன" என்று கூறியுள்ளனர்.

"இதனால் மேலும் அவரது மூக்கின் வழியே குழல்களை நுழைவிக்க முடியாது என்றும் இதனால் அவருக்கு தேவையான கலோரிகள் கிடைப்பது தடைபட்டு போகும்" என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

"இது போன்ற முறைகள் இன்னும் தொடர்ந்தால் அது ஷலபிக்கு நன்மை விளைவிப்பதை விட தீங்கையே ஏற்படுத்தும்" என்று ஷலபியின் வழக்கறிஞர் கூறுகின்றனர்.

ஷலபி கடந்த மார்ச் மாதம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் எடை 107 பவுண்டுகள் குறைந்துள்ளன. இது சராசரி உடல் எடைக்கு 30% குறைவானதாகும், மேலும் அவரது முக்கிய உறுப்புகளும் சேதமடைந்துள்ளன.

ஷலபியின் வழக்கறிஞர் அவரது வழக்கை குவாண்டனாமோ அதிகாரிகளுடன் இணைந்து மருத்துவ வல்லுனர்களும் பணியாற்றுவதை நோக்கமாக கொண்டு நடத்திவருகின்றார்.

ஒருமுறை ஷலபி உண்ணாவிரதம் இருந்த பொழுது அவர் அளவிற்கு மீறி உணவளிக்கப்பட்டார். மேலும் அந்த சமயத்தில் இருமுறைகளுக்கு மேலாக அவரது மூக்கின் வழியாக குழல்கள் செலுத்தப்பட்டது. இதனால் அவருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் மேல் அவர் நினைவு வைக்க முடியாத அளவிற்கு Pepper Spray வை பயன்படுத்தியுள்ளனர்.

தற்பொழுது அவர் மிகவும் மோசமான நிலையில் உள்ளார் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஷலபியின் வழக்கறிஞர், அவரது வழக்கின் ஒரு பகுதியாக வெளியிலிருந்து மருத்துவ நிபுணர்களை வரவழைத்து அவரை பரிசோதித்துள்ளார். இவரை பரிசோதித்த காது, மூக்கு, தொண்டை நிபுணரான டாக்டர் சொன்றா கிராச்பை கூறுகையில், "ஷலபி மீது பயன்படுத்தப்படும் இந்தமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படாத வரையில் அவர் இறந்துவிடுவார்" என்று கூறியுள்ளார்.

"ஷலபி மீதான அதிகாரிகளின் இந்த வன்முறை அவரது மனோ நிலையையும் வெகுவாக பாதித்து உள்ளது" என்று அவரை பரிசோதித்த மன நிலை மருத்துவர் கூறியுள்ளார்.

தனது எடை குறைந்ததைப்பற்றி ஷலபி கூறுகையில், "கவலை, தினசரி துன்புறுத்தப்படுதல், கேவலப்படுத்தப்படுதல், சித்திரவதைகள் ஆகியவையினால் தனது எடை குறைந்தது" என்று கூறியுள்ளார்.

இதனையும் சிறை அதிகாரிகள் வழக்கம் போல் மறுத்துள்ளனர். மேலும் கைதிகள் தவறாக நடத்தப்படுவது தொடர்பாக எல்லா புகார்களையும் நாங்கள் விசாரித்து வருகின்றோம் என்றும் அது நிரூபிக்கப்பட்டால் அதில் தொடர்புடையவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறையின் இராணுவ செய்தி தொடர்பாளரான Lieutenant Commander Brook DeWalt கூறுகின்றார்.

குவாண்டனமோ சிறைக்கைதிகளின் பிரதிநிதியான அதமத் கப்போர், ஒபாமா பதவியேற்றதற்கு பிறகு பல கோரிக்கைகளை பதிவு செய்துள்ளார்.

அவர் இது பற்றி கூறும் பொழுது, இராணுவம் தனது முதல் கோரிக்கையை விசாரிப்பதாக கூறியது, பின்னர் தனது அடுத்தடுத்த கோரிக்கைகளுக்கு எல்லாம் வாய் மூடி மவுனம் சாதிக்கின்றது என்று அவர் கூறுகின்றார்.

தற்பொழுது குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப்பட்டுள்ள முஹமது எல் கரணி, சிறைக்கு வெளியே உள்ள வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்தி வருகின்றார்.

என்னைப்போல் இன்னும் 200 க்கும் மேற்பட்டோர் அந்த சிறையில் இருப்பதாகவும் ஒபாமா வெறும் 20 பேரை மட்டுமே விடுதலை செய்வதாகவும் அவர் கூறுகின்றார்.

சிறைகைதிகளையும் அவர்கள் மீதான மனிதாபிமானத்தையும் வைத்து ஒபாமா அரசியல் விளையாடுகின்றாரா இல்லை சிறை வாசிகளின் கஷ்டங்களை போக்க நடவடிக்கை எடுப்பாரா என்பது ?????? (கேள்விக் குறியே)


தகவல் திரட்ட உதவியது அல் ஜசீரா.

Posted by Wafiq on Tuesday, November 10, 2009. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0

0 கருத்துரைகள் for குவாண்டனமோ - தொடரும் அவலங்கள்

Post a Comment

இன்று

Enter your email address:

Delivered by FeedBurner