இந்தியாவின் வல்லரசு கனவும் அமெரிக்காவின் சுடுகாட்டு மந்திரமும்
سْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِي

மேலும் அடித்தட்டு மக்களின் கட்சியாக இருந்த இடதுசாரி கம்யூனிஸ்டுகளும் மக்களால் புறக்கணிக்கப்பட்டுவிட்டனர்.
காரணம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவாத கொள்கைகளும், நீர்த்துப்போன போராட்ட குணங்களும், கம்யூனிஸ்டுகளின் சமீபத்திய பொருளாதார மோகங்களும் அடிதட்டு மக்களை சந்தேகம் கொள்ள செய்ததும் அவர்களின் தோல்விகளுக்கு மிக பெரிய காரணங்களாக அமைந்தது.
இனப்பற்று ,ஜாதியப்பற்று என்ற எல்லைகளை கடந்து மக்களின் மன நிலைகளும் தனிமனித வளர்ச்சியை நோக்கியே உள்ளது.
பிரச்சினை இல்லாத, குறைந்த பட்ச நலதிட்டங்களுடன் கூடிய முதலாளித்துவ மோகம் கொண்ட காங்கிரஸ் கட்சியை முன்னவர்களை விட இவர்கள் பரவாயில்லை என்ற மன நிலையில் மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இனி நம் நாட்டின் வளர்ச்சி எந்த தொய்வும் இல்லாமல் பெரும் முன்னேற்றத்தை காணும் என்ற பொது மக்களின் எண்ணங்களில் கொஞ்சம் அச்ச உணர்வுகளும் பற்றியுள்ளது.
மும்பை குண்டுவெடிப்புகளுக்கு பின்னால் எந்த பெரிய தீவிரவாத நிகழ்வுகள் இல்லையென்றாலும் ,வழக்கம் போல் காஷ்மீரை சுற்றி நடக்கும் தீவிரவாத வன்முறைகளை மட்டுமே கண்டுவந்த இந்திய அரசாங்கத்திற்கு புதிய நெருக்கடி ஒன்று ,சமீபத்திய நக்சல், மாவோயிஸ்டுகளின் எழுச்சியும் அதன் பின்னனியில் 5 மாநிலங்களில் நடக்கும் வன்முறை நிகழ்வுகளும் தான்.
நக்சல்களுக்கு முன் எப்பொழுதும் இல்லாத ஆதரவு அடித்தட்டு மக்களிடம் இருந்து வருவதை தொலை நோக்குப்பார்வையில் பார்க்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. அவர்கள் சட்டங்களின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை இழந்து வருவதைத்தான் இது காட்டுகின்றது.
போராட்டங்கள், அடைப்புகள் என தொடங்கி, காவல் நிலையம் சூறையாடல், ஆயுத கடத்தல், ஆள் கடத்தல் ,கொலை, இரயில் கடத்தல் என பிரச்சனைகள் மிகவும் பூதாகரமாகிவிட்டது. அவர்களின் ஆயுதங்களின் தரமும் உயர்ந்து கொண்டு வருகின்றது.
நக்சல்களை வளர்த்தது யார் என சி.பி.எம் மும் ,திரிணாமுல் காங்கிரசும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வரும் இன்றைய சூழலில் இந்த நிகழ்வுகள் அனைத்தையும் சாதாரணமான உள் நாட்டு பிரச்சனையாக பார்க்க தோன்றவில்லை.
ஏனென்றால் சமீப காலமாக வடகிழக்கு மாநிலங்களில் சீனாவின் அத்து மீறல்களும், அருணாச்சலப் பிரதேசத்தை உரிமை கொண்டாடுவதும் , பிரதமர் மன்மோகன் சிங்கின் அருணாச்சல பயணத்தை கண்டனம் செய்ததையும்,பிரமபுத்திரா நதியில் அத்துமீறி சீனா அரசு அணை ஒன்றை கட்டுவதாக வரும் ஒவ்வொறு செய்திகளையும் சாதாரணமாக பார்க்க தோன்றவில்லை. காரணம் இந்திய மாவோயிஸ்டு தலைவர்களுக்கு சீனாவும், நேபாளும் கொடுக்கும் முழு ஆதரவுதான்.
இன்னும் மாவோயிஸ்டுகளுக்கு இந்த நாடுகள் அளித்துவரும் நவீன ஆயுதங்கள் இந்திய இராணுவத்தையே கலக்கம் அடைய வைத்துள்ளது.
மாவோயிஸ்டுகள், நக்சல்களின் சமீபத்திய உள் நாட்டுக்கலவரங்களை இந்திய அரசும் , உளவுத்துறையும் இதை சாதாரண பிரச்சனையாக பார்க்காது என்பதில் சந்தேகம் இல்லை.
சீனாவின் நட்பு நாடான பாகிஸ்தானில் தாலிபான்களின் கொடுர தாக்குதல்கள் அதிகமாகி வருகின்றது , கடந்த ஒரு மாதத்திற்குள் பல குண்டு வெடிப்புகள் , துப்பாக்கி சூடுகள் என தொடர்ந்து பாகிஸ்தான் நாட்டின் மிக பாதுகாப்பான அணு ஆலை வரையிலும் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் தொடர்வது உலக நாடுகளை கவலையடைய செய்துள்ளது. பாகிஸ்தானில் மட்டும் ஒரு மாத காலத்திற்குள் சுமார் 170 பேர் பொது மக்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.
தாலிபான்களினால் பாகிஸ்தானில் நடக்கும் குண்டுவெடிப்புகளுக்கு இந்திய உளவுத்துறைகளின் சில ஏஜெண்டுகள் தான் உதவி வருவதாகும் அதை தன்னால் நிரூபிக்க முடியும் என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹுமான் மாலிக் பகிரங்கமாகவே இந்தியாவை குற்றம் சாட்டியுள்ளார்.
இதை இந்தியா கடுமையாகவே மறுத்துள்ளது. ஆஃப்கானில் இந்திய தூதரகம் இரு முறை தாலிபான்களால் தாக்கப்பட்டதற்கும் பாகிஸ்தான் தான் காரணம் என ஆஃப்கானும், இந்தியாவும் குற்றம் சாட்டி வருவதை யாரும் மறந்திருக்க முடியாது.
ஆக மொத்தம் யார் இந்த தாலிபான்கள், இந்தியாவை பாகிஸ்தான் ஆதரவுடன் கடுமையாக தாக்கிவரும் இந்த தாலிபான்கள் , இந்தியாவின் ஆதரவுடன் பாகிஸ்தானையும் தாக்கிவருவதாக கூறப்படும் இவர்களை யார்தான் இயக்குகிறார்கள்? ஒரு தீவிரவாத இயக்கம் எப்படி இரு நாட்டுக்கும் எதிரியாகவும் , நட்பாகவும் இருக்க முடியும்? இந்த தாலிபான்களை உருவாக்கிதே அமெரிக்கா தான், சோவியத் ரஷியாவுடனான பனிப்போருக்கு, ரஷியாவின் ஆதரவு ஆயுத போராளிகளான வடக்கு கூட்டணிக்கு எதிராய் ஆயுதம் தந்து, பயிற்சி தந்து அவர்களை செல்லப்பிள்ளையாய் வளர்த்தவர்களே இந்த அமெரிக்காதான்.
அமெரிக்கா பாகிஸ்தானுக்கு அளித்த தீவிரவாத எதிர்ப்பு நிதியை, பாகிஸ்தான் சரியாக பயன்படுத்தவில்லை அது இந்தியாவிற்கு எதிரான குற்றங்களுக்கே அதிகம் பயன்படுத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டினை முறியடிக்கவே இந்த தாலிபான்கள் எதிப்பும் , பதிலடியாக தாலிபான்கள் பாகிஸ்தானை ஒரு சுடுகாடாகவும் மாற்றி வருகிறது. அங்கு மக்கள் ஒவ்வொரு நாளும் உயிர் வாழ்வதே பெரும் ஆச்சரியமான ஒன்றாகிவிட்டது. பள்ளிகள் ,கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் என பொது மக்கள் நடமாடும் இடங்கள் எல்லாம் குண்டுகள் வெடிக்கும் பகுதியாகிவிட்டது. தெற்கு ஆசியாவில் நன்கு வளர்ந்த வந்த நாடுகளில் ஒன்றான பாகிஸ்தான், அமெரிக்கா ஆதரவுடன் இந்தியாவிற்கு எப்பொழுதும் தீவிரவாத தொல்லை கொடுத்து வந்தது. இன்று அதே தீவிரவாதிகளால் உள் நாட்டு பிரச்சனைகள் விசுவரூபம் எடுக்க ஆரம்பித்து விட்டது.
அமெரிக்காவின் கூடாத நட்பினால் பாகிஸ்தான் இன்று அணு உலைக்குள் சிக்கிய எலியாகிவிட்டது.
ஆக பாகிஸ்தானில் தாலிபான்களால் நடக்கும் கலவரங்களும், இந்தியாவில் நக்சலைட்டுகளால் நடக்கும் கலவரங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு இல்லாத வெறும் உள் நாட்டு பிரச்சனைகள் அல்ல.
அது இந்தியாவையும், பாகிஸ்தானையும் இன்னொரு இராக்காகவும், ஆப்கானாகவும் மாற்றத்துடிக்கும் அமெரிக்காவின் நாடு தாண்டிய பயங்கரவாத திட்டம் ஆகும்.
இவை அனைத்தும் ஆதிக்க வெறியுடன், நாடு பிடிக்கும் உலகலாவிய ஏகாதிபத்திய போட்டிகள் அன்றி வேறொன்றும் கிடையாது.
இந்தியா இன்று வளர்ந்து வரும் வேகத்தில் இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா உலக அளவில் தவிர்க்க முடியாத வல்லரசு நாடாகி விடும் என்ற அச்சம் தான் இதற்கு பெரும் காரணம்.
இந்தியா, பொருளாதார ரீதியாக சீனாவை விட முன்னேற்றம் காணக்கூடாது என்பதும் முதலாளித்துவ மோகம் கொண்ட இந்தியா அமெரிக்காவின் நட்பு நாடாகிவிடகூடாது என்பதும் தான் பாகிஸ்தானின் நட்பு நாடான சீனாவின் எண்ணம்.
இந்த ஏகாதிபத்திய போட்டிகள் எல்லை தாண்டி இலங்கையிலும் பதட்டமான சூழலை உருவாக்கியுள்ளது.
இலங்கையில் நடந்தேறிய இனப்படுக்கொலைகள் பற்றி எந்த ஒரு நாட்டிற்கும் துளி கூட கவலை இல்லை. ஏனென்றால் இலங்கையின் எல்லை பகுதிகளில் ஆதிக்கம் செலுத்துவதில் அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான்,சீனா என உளவுத்துறை பட்டாளங்களின் போட்டிகள் வெகுவாக நடந்து கொண்டிருக்கின்றது.
தெற்காசியாவில் அமைதி இல்லாமல், ஒருவருக்கொருவர் பகைமை பூசல் இருப்பதினால் மட்டுமே அமெரிக்கா என்றும் தனி பெரும் எதிரிகள் இல்லாத வல்லரசாக திகழமுடியும் என்பது தான் அமெரிக்காவின் குள்ள நரித்திட்டம்.
அதை கடந்த காலங்களில் மிகவும் சரியாக நிருபித்துள்ளனர்.
இன்று நாம் காணும் பூமியின் நரகங்களான இராக், ஆஃப்கான் , பாலஸ்தீனம் எல்லாம் அமெரிக்கா உலகுக்கு தந்த அமைதி பரிசுகள். அமெரிக்காவின் முழு கவனமும் இப்பொழுது இந்தியா மற்றும் பாகிஸ்தான் மீதுதான்.
இரான் –இராக் போரின் போது சதாம் ஹுஸைனுக்கு அமெரிக்கா கொடுக்காத ஆதரவா இப்பொழுது பாகிஸ்தானுக்கும், இந்தியாவிற்கும் கொடுக்கின்றது? அதே சதாம் ஹுஸைனை தூக்கில் ஏற்றி கொன்றது. இன்று எண்ணெய் வளமிக்க அரேபிய நாடுகள் அனைத்தும் சுய நினைவை இழந்து அமெரிக்காவின் அடிமை நாடுகளாகிவிட்டது.
அமெரிக்காவின் ஏகாதிபத்திய நிழல் இப்பொழுது தெற்காசிய நாடுகளின் மீது பரவியுள்ளது.
தாராளமயமாக்குதல், திறந்த பொருளாதாரதிட்டங்கள் , ஒருங்கிணைந்த இராணுவ பயிற்சி என பல விதமான வழிகளில் அமெரிக்கா, மொஸாத் உளவு துறைகளின் ஊடுறுவல்கள் நிச்சயமாக நம் நாட்டினை மாபெரும் அழிவிற்கு கொண்டு செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.
நேரு காலத்து அணிசேராக்கொள்கைகள் இன்று கொஞ்சமும் இல்லாமல் முழுமையாக முதாலாளித்துவ ஆதரவு நாடாகிவரும் இந்த நிலை நிச்சயமாக நம் நாட்டுக்கு நல்லது அல்ல.
தாராளமயமாக்களின் விளைவு இன்று அடித்தட்டு மக்களுக்கும், உயர் வகுப்பு மக்களுக்குமான இடைவெளி அதிகமாகிவிட்டது. விளைவு அடித்தட்டு மக்கள் அரசியல், ஜன நாயக, சட்டங்களின் மீது நம்பிக்கை இழந்து வருகின்றனர்.
பொருளாதார ரீதியான சம நிலை இல்லாவிட்டாலும், இடைவெளிகளை மக்களுக்குள் குறைத்திடவேண்டும். முதலாளித்துவ போதையிலிருந்து நம் நாடு மீண்டு வரவேண்டும். உள் நாட்டு பொருளாதார முன்னேற்றதில் முழுமையான கவனம் கொள்ளவேண்டும். அடித்தட்டு மக்களுக்கான அரசாக மாறவேண்டும்.
பங்காளிச்சண்டைகளை நிறுத்தி விட்டு, எல்லை நாடுகளுடன் நல்ல உறவுகள் கொண்டு, அமெரிக்காவை தூர வைப்பதன் மூலமாகத்தான் தெற்கு ஆசியாவில் அமைதி காண முடியும் என்பதில் துளி அளவும் சந்தேகமில்லை.
நன்றி,
மால்கம் X.பாரூக்.
