அமெரிக்கப் பொருளாதாரம்... அறிஞர்களின் கவலை
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

இந்த நிலையில், நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் ஜோசப் ஸ்டிக்ளிட்ஸ், 2010-லும் அமெரிக்கா ஒரு பெரிய சரிவை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்றும், இந்த முறை இன்னும் அதிக ஊக்கச் சலுகை திட்டத்தை (Stimulus Package) அது அறிவிக்க வேண்டி வரும் என்றும் கூறியுள்ளார்.
"2009-ன் பிற்பகுதியில் பல முன்னேற்றங்கள் இருக்கும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் ஒபாமா அரசு கொடுத்த நிதிச் சலுகைகள் எதிர்ப்பார்த்த பலனைக் கொடுக்கவில்லை. இன்னும் அமெரிக்காவிலிருந்து பெருமளவில் வருவது வேலை நியமனங்கள் அல்ல... வேலை இழப்புகள்தான். இந்த நிலை இன்னும் ஆறு மாதங்களில் தீவிரமடையும் அறிகுறிகள்தான் தெரிகின்றன. அதற்கு இப்போதே தயார்படுத்திக் கொள்ளாவிட்டால், அமெரிக்காவின் நிலைமை மிக சிக்கலாகிவிடும்" என்கிறார் ஸ்டிக்ளிட்ஸ்.
நோபல் பரிசு பெற்ற இன்னொரு பொருளாதார அறிஞர் பால் க்ருக்மேனும் இதே கருத்தைத் தெரிவித்திருந்தார், சில வாரங்களுக்கு முன்பு.
ஆனால் ஒபாமா அரசு, தனது 787 பில்லியன் டாலர் முதல் சலுகைத் திட்டத்தால் நல்ல பலன் தெரிவதாகவும், வேலைவாய்ப்புகளைப் பெருக்க 157 பில்லியன் டாலர் கூடுதல் நிதிச் சலுகை கொடுத்தால் போதும் என்றும் கூறியுள்ளது.
கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் அமெரிக்காவில் 70 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக அமெரிக்க தொழிலாளர் துறை அறிவித்துள்ளது. இப்போது மாதம் 10 சதவிகித அளவு வேலை இழப்புகள் தொடர்கின்றது. ஆனால் வேலை இழப்பின் அளவுக்கு புதிய வேலைகளை உருவாக்கும் ஒபாமா அரசின் முயற்சிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இந்த உண்மையை ஒப்புக் கொண்டுள்ள ஒபாமா, இதைச் சரிசெய்யவே கூடுதல் நிதிச் சலுகை தரத் திட்டமிட்டுள்ளார்.
ஆனால் பொருளியல் அறிஞர்களோ, அது போதாது என்றும், மேலும் ஒரு பெரிய ஊக்குவிப்புச் சலுகைத் திட்டம் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறார்கள். அதே நேரம் கடந்த இரு ஆண்டுகளில் மைனஸில் இருந்த பொருளாதார வளர்ச்சி 2009ன் மூன்றாவது காலாண்டில்தான் 2.8 சதவிகித வளர்ச்சியை எட்டியுள்ளது என்பதையும் ஒப்புக் கொள்கிறார்கள்.
'இந்த வளர்ச்சி நிலையைத் தக்க வைக்கவே மிகப் பெரிய செலவு செய்ய வேண்டி வரும். வேறு வழியில்லை' என்கிறார் ஸ்டிக்ளிட்ஸ்
நன்றி,
தட்ஸ்தமிழ்.
