பொருளாதாரம்
سْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

அமெரிக்காவில் ஆரம்பித்த இந்த பிரச்சனையைப் பற்றி இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் உள்ள குப்பனும் சுப்பனும் கதைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அமெரிக்க வங்கிகள் செய்த மாபெரும் தவறால்(அது என்ன தவறு என்பது அடுத்தடுத்த பகுதிகளில்....)அவர்கள் திவாலாகி நின்றார்கள். அதன் பலன் நமது கிராமத்தின் ஒவ்வொரு விவசாயி வாங்கி பயிரிடுவதற்கு உதவும் உரத்தின் விலையில் எதிரொலித்தது. எனவே மக்கள் எதற்கு இந்த நிலை ஏற்பட்டது என சிந்திக்கவும் அதைப் பற்றி ஆராயவும் தொடங்கி விட்டார்கள்.
"தென்னை மரத்திற்கு தேள் கொட்டினால் பனை மரத்திற்கு நெறி கட்டும்"என்ற பழமொழிக்கு ஏற்ப, அமெரிக்காவிலும் இன்ன பிற மேலை நாடுகளிலும் ஏற்பட்ட இந்த பொருளாதார சீரழிவு நம்மை ஏன் பாதிக்க வேண்டும்? நம்முடைய திறமையான மென்பொருள் வல்லுனர்கள் ஏன் பன்னாட்டு நிறுவனங்களிலிருந்து தூக்கி எறியப்பட வேண்டும்? நாம் உணவிற்காக வாங்கும் மளிகைச் சாமான்கள் ஏன் விலைவாசியில் விண்ணை முட்டி நிற்க வேண்டும்?
இதுபோன்ற காரணங்களுக்காக விடை தேடி ஒரு சில மக்கள் பயணிக்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்களைத் தொடர்ந்து நாமும் பயணிப்போம்.
நாம் அன்றாடம் சந்திக்கும் டீ கடை முதலாளி முதல் அமெரிக்க வாரன் பஃபட் (Warren Buffet) வரை தங்களது தொழிலைப் பற்றி பொருளாதார திட்டம் தீட்டிக் கொண்டு தான் இருக்கிறார்கள். நாமும் தெரிந்தோ தெரியாமலோ நமது அடுத்த மாத சம்பளத்தை எவ்வாறு செலவு செய்யலாம்,என்ன வாங்கலாம், எவ்வளவு சேமிக்கலாம் என்பது பற்றி மாதத்தின் கடைசி 10 நாட்களில் யோசிக்க ஆரம்பித்து விடுவோம்.
பொருளாதாரத்தின் பல்வேறு முகங்களையும் அதன் செயற்கூறுகளையும் இனிவரும் ஒவ்வொரு பகுதியிலும் விரிவாக அலசலாம். .
தொடரும். . . .
நன்றி
சேக் முஹம்மது. B.E

